கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கல்லார் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், சிவக்குமார், வெள்ளியங்கிரி என்பது தெரியவந்தது.

இவர்கள் ஆற்றுப்பகுதியில் இறந்து கிடந்த புள்ளிமானின் இறைச்சியை வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனால் வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமாரின் உத்தரவின் பேரில் 3 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வீதம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.