நாங்கள் நல்ல ஓய்வைப் பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்புவோம் எனஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்..

இங்கிலாந்து சென்று ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஏற்கனவே ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டிலும் வெற்றி பெற்று வலுவான முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் எடுத்தார்.முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி டக் அவுட் ஆகி 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் இறுதி வரை போராடி 80 ரன்களில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 250 ரன்கள் முன்னிலை பெற்று 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விரட்டிய இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதும் சோபிக்கவில்லை. ஜாக் க்ராலி அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இருவரும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகினர்.. இருப்பினும் ஹாரி புரூக் பொறுப்புடன் விளையாடி 75 ரன்களில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலிய  கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில், “இன்னிங்ஸில் சில தருணங்கள் எங்களுக்கு ஏற்றத்தையும் சில தருணங்கள் எங்களுக்கு இறக்கத்தையும் கொடுத்தன. போட்டி இருபுறமும் மாறி மாறி சென்றது. 250 ரன்கள் இலக்கை கட்டுப்படுத்த முடியும். ஆனால் எங்களின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. போட்டியில் மார்ஷ் சிறப்பாக செயல்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் விளையாட முயன்ற மார்ஷ், காயத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களிடம் உள்ள சில நாட்களில் நாங்கள் நல்ல ஓய்வைப் பெறுவோம், எங்கள் ஆற்றலைப் பெற்றவுடன் மான்செஸ்டரில் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என்று கூறினார்.