சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால், “தூங்கும் இளவரசர்” என அறியப்படுபவர். அவர் 2005-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில், கடுமையான மூளை இரத்தக் கிளர்ச்சி ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து 21 ஆண்டுகளாக கோமா நிலையில் வாழ்ந்து வருகின்றார். தற்போது வயது 36 ஆகும் அவருக்கான பிறந்த நாளான ஏப்ரல் 18 அன்று, உலகம் முழுவதும் இருந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துகள், பிரார்த்தனைகள் என உணர்ச்சி பொங்கும் பதிவுகள் வலம் வந்தன.

 

அவரது மாமி இளவரசி ரீமா பிந்த் தலால், X பக்கத்தில் சிறுவயது புகைப்படங்களுடன், “எங்கள் அன்பு அல்-வலீத் – 21 ஆண்டுகளாக நீ எங்களது இருதயங்களில் தொடர்ந்து இருக்கிறாய். இறைவா! உமது பணியாளருக்கு நலமளி. உம்மையே நம்புகிறோம்!” என உருக்கமான பதிவை பகிர்ந்திருந்தார். இது பெருமளவு கவனத்தை பெற்றது. பலரும் “அல்-வலீத்திற்கும், அனைத்து நோயாளிகளுக்கும் நலமளிக்க இறைவனை வேண்டுகிறேன்” என வாழ்த்தினர். சிலர் அவருடைய நிலையை “ஒரு சகிப்புத் தன்மை கொண்ட அதிசயம்” என்றும் குறிப்பிடுகின்றனர்.

 

இப்போது ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவக் குழுவின் கீழ் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார். கடந்த ஆண்டுகளில், மூன்று அமெரிக்கர்கள், ஒரு ஸ்பானிய நிபுணர் உட்பட உலகின் சிறந்த மருத்துவர்கள் அவரது சிகிச்சையில் ஈடுபட்டும், இன்னும் முழுமையான நலத்தை அடையவில்லை. 2019-ஆம் ஆண்டு சில சிறிய அசைவுகள் பதிவானாலும், விழிப்புணர்வுடன் தன்னை வெளிக்காட்டும் எந்த அறிகுறியும் இல்லை. இருந்தாலும், அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால், இன்னும் நம்பிக்கையை தவறாமல், “இறைவன் உயிரை காப்பாற்றியிருப்பது, மீண்டும் அவரை நலமாக்குவதற்கே!” என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.