முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 20) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு, கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக விடுபட்டு வருகின்றன. திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் நிலையில், அதன் கூட்டணி கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை பகல் 12 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னையில் 3 தொகுதிகள் உட்பட 21 மக்களவைத் தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குகிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவு செய்ததை அடுத்து வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது திமுக.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் :

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், பெரம்பலூர்,
தூத்துக்குடி, தஞ்சாவூர், தென்காசி, தேனி, ஆரணி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.