2026-ம் ஆண்டு பொங்கல் ரேசில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் மோதிக்கொண்ட நிலையில், இந்த ஆண்டின் உண்மையான ‘பொங்கல் வின்னர்’ யார் என்பதைப் பிரபல விநியோகஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, கார்த்தியின் ‘வா வாத்தியார்’ மற்றும் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.
மேலும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சிவகார்த்திகேயனின் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக 100 கோடியைக் கடந்து சாதனை படைத்தது. அதேபோல் கார்த்தியின் படமும் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பையே பெற்றது.
இருப்பினும், இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜீவாவிற்கு ஒரு வலுவான மீள்வருகையாக அமைந்த இந்தத் திரைப்படம், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இது குறித்துப் பேசிய பிரபல விநியோகஸ்தர், விமர்சன ரீதியாகவும் மக்கள் செல்வாக்கு ரீதியாகவும் இந்த ஆண்டு பொங்கல் பந்தயத்தில் ஜீவாவின் படமே உண்மையான வெற்றியாளர் எனத் தெரிவித்துள்ளார். பல தோல்விகளுக்குப் பின் ஜீவா மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
