நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை (ஜன.,31) ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரை முழு ஒத்துழைப்புடன் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இன்று நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்து உள்ளார்.

வருடந்தோறும் ஜனவரி மாத இறுதியில் அந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நடைபெறும். அதன்படி நாளை(ஜன,.31) இந்த கூட்டத்தொடர் துவங்குகிறது. இதில் காலை நடைபெறும் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது இது தான் முதல் முறை. இக்கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.

இந்த அறிக்கையில் 2022-23 ஆம் ஆண்டின் வளர்ச்சி, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அதனை தொடர்ந்து அடுத்த நாள் பிப்,.1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.