தாம்பரத்தில் 2012 ஆம் ஆண்டு  தனியார் பள்ளி பேருந்தில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த வழக்கில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்..

சென்னை சேலையூர் சீயோன் பள்ளிக்கூடத்தில் 2ஆம்  வகுப்பு படித்து வந்தவர் மாணவி சுருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகள். இவர் தினமும் பள்ளிக்கு பள்ளி பேருந்தில் சென்று விட்டு திரும்புவார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று பள்ளிக்கு பேருந்தில் சென்றபோது, சுருதி இருந்த இருக்கை ஆடி இருக்கிறது. ஆடிய உடனே  பேருந்து சென்று கொண்டிருந்தபோது சீட்டின் கீழ் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்துள்ளார் சிறுமி. அப்போது அதே பேருந்தின் சக்கரமானது குழந்தையின் தலையில் ஏறி மூளை சிதறி அந்த இடத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கானது செங்கல்பட்டு மாவட்ட அமர்வு முன்பு நடந்து வந்தது. இந்த வழக்கானது கடந்த பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்தநிலையில் தற்போது அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வந்த பள்ளி தாளாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி காயத்ரி அவர்கள் உத்தரவை பிறப்பித்துள்ளார்..