சென்னையில் நடப்பு ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குளிர்காலம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பனிப் பொழிவு அதிகரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பருவகால உடல் உபாதைகளால் பாதிப்படைந்து உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் 30 -50 சதவீதம் குழந்தைகள் இருமல் மற்றும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சராசரியாக 40% குழந்தைகள் சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் புற நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். ஆகவே குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதாவது, சளி, இருமல், தொண்டை வலி, சுவாசப்பிரச்னை ஆகியவை இருந்தால் குழந்தைகளை பள்ளி மற்றும் கூட்டமாகவுள்ள பகுதிகளுக்குச் செல்லவிடாமல் தடுக்க வேண்டும்.

இதன் வாயிலாக மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படுகிறது. குழந்தைகளின் 5 வயது வரை தேவையான மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை முறையாக செலுத்தவேண்டும். முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்டவற்றை குழந்தைகள் மத்தியில் முறைப்படுத்த வேண்டும் என பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.