சீனா, தென் கொரியா, ஜப்பான் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நான்காம் தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக கடந்த வருடம் டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற இந்திய மருத்துவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மூத்த மருத்துவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டாவது முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, இரண்டாவது முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இப்போதைக்கு இல்லை. மேலும் இந்தியாவில் இப்போது மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் இரண்டாவது முன்னெச்சரிக்கை தவணை பயன்பாடு தொடர்பான எந்தவித புள்ளி விவரங்களும் அரசிடம் இல்லை. அதிலும் முக்கியமாக மூன்றாம் தவணையே பெரும்பாலான மக்கள் இன்னும் செலுத்திக் கொள்ள வேண்டியது இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.