முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அனுஷ்கா திவாரி மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது சிறையில் இருக்கும்போது, விசாரணை அதிகாரியிடம் தனது குற்றத்தை நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார்.

“ஆம், இருவருக்கும் நானே முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தேன்” என்று அனுஷ்கா கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 2019 முதல் இத்தகைய சிகிச்சைகளை செய்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முந்தைய முறையில், ADJ நீதிமன்றத்தில் ஆஜரானபோது, டாக்டர் அனுஷ்கா “தான் எந்த அறுவை சிகிச்சையும் செய்யவில்லை” என்று மறுத்து, தனக்கு  பழக்கமான டாக்டர் மனிஷ் சிங் மீது பழி சுமத்தியிருந்தார். ஆனால் தற்போது உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், விசாரணை அதிகாரி, புதன்கிழமை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். அனுஷ்கா வழங்கிய வாக்குமூலங்கள் அடிப்படையில் மேலும் ஆதாரங்கள் திரட்டப்பட உள்ளன.

இந்த வழக்கில் மருத்துவ அறிக்கைகள் முக்கிய ஆதாரமாக  உள்ளன. இறந்த இருவருக்கும் சிகிச்சையளித்த மருத்துவமனையின் சிபிஎம் மற்றும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களின் வாக்குமூலங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அனுஷ்காவின் மருத்துவ அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது.

இறந்தவர்களின் உறவினர்கள் வாக்குமூலங்களும் விரைவில் பதிவு செய்யப்பட உள்ளன. விசாரணையின் போது, அனுஷ்கா கண்ணீருடன் பேசியதோடு, தனது கணவரும்  சிறையில் அடைக்கப்படுவார் என்பதற்கான பயத்தால்தான் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி பொய்யான அறிக்கையில் கையெழுத்திட்டேன் என்று கூறியுள்ளார். தற்போது, இந்த சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.