இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி..

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில்  இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் இரு அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக யுஸ்வேந்திர சாஹல் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல இலங்கை அணியில் நிசாங்கா மற்றும் மதுசங்கா ஆகியோருக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ மற்றும் லகிறு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்..

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக துவக்க வீரர் நுவனிது பெர்னான்டோ 50 ரன்கள் எடுத்தார். மேலும் குஷால் மெண்டிஸ் 34 ரன்களும், வெல்லலகே 32 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதை எடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா 17 மற்றும் சுப்மன் கில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். அதை தொடர்ந்து வந்த விராட் கோலி 4 ரன்னில் வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் 22 ரன்கள் சேர்த்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார்..

இந்திய அணி 14.2 ஓவரில் 86 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. அப்போது கே.எல் ராகுல் – ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அதன்பின் பாண்டியா 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்வந்த அக்சர் படேல் 21 ரன்கள் சேர்த்து அவுட்டாக, மறுமனையில் கே.எல் ராகுல் பொறுமையாக ஆடி அரை சதம் கடந்தார்.. தொடர்ந்து கே.எல் ராகுல் – குல்தீப் யாதவ் கைகோர்த்து அணியை வெற்றிபெற செய்தனர். கே.எல் ராகுல் 64 (103) ரன்களுடனும், குல்தீப் யாதவ் 10 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இறுதியில் இந்திய அணி 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 :0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குமாரா மற்றும் கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரஜிதா மற்றும்  தனஞ்செயா டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.