இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

இதில் பில் சால்ட் அதிரடியாக விளையாடிய நிலையில் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது டோனி ஸ்டெம்ப் விக்கெட்டில் அவரை அவுட் ஆக்கினார். இதைத்தொடர்ந்து விராட் கோலியுடன் படிக்கல் ஜோடி சேர்ந்த நிலையில் அவர் 27 ரன்களில் அவுட் ஆனதால் அடுத்ததாக கேப்டன் ரஜத் படிதார் இறங்கினார்.

அதிரடியாக விளையாடிய படிதார் அரை சதம் கடந்தார். இந்த போட்டியில் நிதானமாக விளையாடிய விராட் கோலி 37 ரன்கள் வரை எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய லிவிங்ஸ்டன் 10 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 12 ரன்களிலும் அவுட் ஆன நிலையில் கேப்டன் ரஜத் படித்தாரும் 56 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

இறுதியில்  சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆன நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா மற்றும் சாம் கரன் உள்ளிட்ட வீரர்களும் உடனடியாக அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிட்டத்தட்ட 17 வருடங்களாக சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்து வந்த நிலையில் முதல் முறையாக சென்னையில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களூர் அணி சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியது.மேலும் அதன் பிறகு நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பெங்களூரு சென்னையிடம் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெற்றியை பெற்றுள்ளது ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.