உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த ஹாஸ்பிடலில் கடந்த 2007 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அந்த பெண் ஆப்ரேஷன் மூலமாக குழந்தையை பெற்றெடுத்த நிலையில் அது முதலே கிட்டத்தட்ட 17 வருடங்களாக தீராத வயிற்று வலியில் இருந்துள்ளார். இதற்காக அவர் பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற போதிலும் பலன் இல்லை. இந்நிலையில் தற்போது சந்தியா வேறொரு பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவர் லக்னோ மருத்துவக் கல்லூரியில் தன்னுடைய வயிற்றில் எக்ஸ்ரே எடுத்து பார்த்தார்.

அப்போது வயிற்றில் ஒரு கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது. கடந்த 26 ஆம் தேதி சந்தியாவுக்கு ஆப்ரேஷன் செய்து கத்திரிக்கோலை மருத்துவர்கள் அகற்றினர். இந்நிலையில் தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது தற்போது அவருடைய கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த டாக்டரின் அலட்சியத்தால் கிட்டத்தட்ட 17 வருடங்களாக தன் மனைவி தீராத வேதனையில் இருந்ததாக அவர் தன் புகாரில் கூறியுள்ளார். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.