தமிழ் சின்னத்திரையில் முன்னணித் தொகுப்பாளினியாகவும், பிக்பாஸ் பிரபலமாகவும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் ஜாக்குலின். எப்போதும் மேடைகளில் கலகலப்பாகவும், துள்ளலாகவும் பேசி ரசிகர்களைக் கவர்ந்து வரும் அவர், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது வாழ்க்கையில் சந்தித்த கடுமையான கடன் பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து முதன்முறையாக ஓப்பனாகப் பேசி உடைந்து போயுள்ளார்.
“வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் பெரிய பிரபலங்கள், எளிதாக எல்லாவற்றையும் சாதித்து விடுவார்கள் என்றுதான் தோன்றும். ஆனால், ஒரு ஷோவிற்குப் போவதற்கு சரியான ஆடை கூட இல்லாமல் நான் கதறி அழுத நாட்களெல்லாம் உண்டு; என்னுடைய வீட்டின் வாடகையைக் கூட கட்ட முடியாத அளவுக்குப் பயங்கரமான கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன்” என்று ஜாக்குலின் தனது எமோஷனலான பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் தனது பிக்பாஸ் பயணத்தின் பின்னணியில் இருந்த ரகசியத்தை உடைத்த அவர், “நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கே எங்களது குடும்பத்தில் பெரும் நிதி நெருக்கடி இருந்தது. என் அம்மாவின் நகைகளை அடகு வைத்துத்தான் பிக்பாஸ் ஷோவிற்கான ஆடைகளையே என்னால் ரெடி செய்ய முடிந்தது. ஆனால் வெளியே இருந்தவர்கள் நான் பெரிய அளவில் ‘PR’ (மக்கள் தொடர்பு குழு) வைத்திருப்பதாக வதந்திகளைப் பரப்பினார்கள்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, எனக்குக் கிடைத்த சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட என் கையில் மிஞ்சவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பே என் அம்மாவிடம் ‘நான் பிக்பாஸ் போவேன், சம்பாதிப்பேன், நம் கடன்களை எல்லாம் அடைப்பேன்’ என்று சவால் விட்டிருந்தேன். அதேபோல, அங்கு கிடைத்த மொத்தப் பணத்தையும் வைத்து எங்களது கடன்கள் அனைத்தையும் செட்டில் செய்துவிட்டு, இப்போதுதான் நிம்மதியாக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தொகுப்பாளராகத் தனது ஆரம்பகாலப் போராட்டங்களை நினைவு கூர்ந்த ஜாக்குலின், “நாம் உடுத்தும் ஆடையை வைத்துத்தான் இந்த உலகம் நம்மை எடைபோடுகிறது. ஒரு பெரிய ஷோவிற்கு தொகுப்பாளராகப் போகும்போது, அங்கே பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றால், நாம் போடும் ஆடையின் விலையே பத்தாயிரம் ரூபாயாக இருக்கும். நான் தொகுத்து வழங்கிய முதல் ஷோவான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் முதல் நாள் ஷூட்டிங்கிற்கு முந்தைய நாள்தான் எனக்கு அழைப்பு வந்தது. ஆடைகளை என்னையே எடுத்து வரச் சொல்லிவிட்டார்கள், என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போது, ‘பசங்க’ பட ஹீரோவின் மனைவியும், பிரபல சீரியல் நடிகையுமான ப்ரீத்தியிடம் ஓடிப் போய் உதவி கேட்டேன். அவர் எந்தக் கேள்வியும் கேட்காமல் எனக்கு உடனடியாக 3 ஆடைகளைத் தந்து உதவினார், அதை வைத்துத்தான் என் முதல் ஆங்கரிங்கையே செய்தேன். அதேபோல, வருடத்தின் எல்லா மாதங்களிலும் எனக்கு ஏதாவது ஒரு ஈவென்ட் கொடுத்து, என் மாதச் செலவை ஓட்ட உதவியாக இருந்தவர் மாகாபா ஆனந்த் அண்ணன் தான்” என்று தனக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளார்.
