தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு மட்டுமே வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் திரண்டிருந்தனர். இந்த மாநாட்டுக்கு மேகநாதன் என்ற இளைஞர் சென்றுள்ளார். இவர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையான் காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவருடன் மொத்தம் 34 பேர் சென்ற நிலையில் அனைவரும் மாநாடு முடிந்து வீட்டிற்கு திரும்பி விட்டனர்.

ஆனால் மேகநாதன் மட்டும் இன்னும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய தந்தை விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தன் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார். அவரின் தந்தை புஸ்பநாதன் புகார் மனு கொடுத்ததோடு தன் மகனை கண்டுபிடித்து தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு சென்ற சிறுவன் ஒருவன் காணாமல் போன நிலையில் அந்த சிறுவன் நடந்தே சென்று தன் பெற்றோரை சேர்ந்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.