ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு எமிரேட்ஸ் என்ற விமானம் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் அந்த விமானம் ஆக்லாந்து நோக்கி புறப்பட்டு பாதி தூரத்தை கடந்த போது, நியூசிலாந்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஆக்லாந்து விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் ஆக்லாந்து நோக்கி வந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமான கேப்டனிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து பாதி தூரம் வந்த விமானம் ஆக்லாந்தில் தரையிறங்க முடியாததால் நடுவானில் கேப்டன் விமானத்தை திருப்பி, மீண்டும் துபாய் நோக்கி இயக்கினார். மேலும் புறப்பட்ட விமான நிலையமான துபாய் விமான நிலையத்திலேயே பத்திரமாக வந்து தரையிறங்கியது. ஒட்டுமொத்தமாக 13 மணி நேரம் இந்த விமானம் நடுவானில் பறந்துள்ளது. எனவே கனமழையால் ஆக்லாந்துக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து  நிலைமை சற்று சீரடைந்த பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் துபாயில் இருந்து புறப்பட்டது. இந்த முறை புறப்பட்ட விமானம் 16 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக நியூசிலாந்தில் தரையிறங்கியது.