சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் ஒரு 13 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் இருவரும் தினமும் வேலைக்கு சென்று விடுவதால் அவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். இதனை அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் கவனித்த நிலையில் தினமும் தண்ணீர் கேன் போட சொல்வது போன்று சிறுமியிடம் பேசி பழகினான்.

ஒரு கட்டத்தில் சிறுமியிடம் காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகளை பேசி பழகினான். அதனை சிறுமியும் உண்மை என நம்பிய நிலையில் சிறுவனிடம் பழகினார். இந்நிலையில் ஆள் இல்லாத நேரம் பார்த்து சிறுவன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய நண்பர்கள் சிலரையும் சிறுமிக்கு அறிமுகப்படுத்தி வைத்து அவர்களையும் பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளான்.

அந்த சிறுமிக்கு தனக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாத நிலையில் மிகவும் மன வேதனையில் இருந்தார். இதனை கவனித்த சிறுமியின் தாயார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது உண்மை தெரிய வரவே பின்னர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த 7 சிறுவர்கள் மற்றும் நிக்சன் (22), சூர்யா (22), சஞ்சய் (19), நந்தகுமார் (19) உட்பட 12 பேரை கைது செய்தனர். மேலும் இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.