சென்னை மாவட்டம் அண்ணா மேம்பாலத்தில் சென்ற மாநகர அரசு பேருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இடது வளைவில் திரும்ப முயன்ற போது டிரைவர் சீட் கழன்றதால் பேருந்து வலது பக்கம் தள்ளப்பட்டு மேம்பால சுவரை உடைத்துக் கொண்டு தலைக்குப்புற கவிழ்ந்ததில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுனர் பிரசாத்தை கைது செய்து அவரது உரிமத்தை பறிமுதல் செய்தனர். செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதால் தான் பேருந்து விபத்தில் சிக்கியதாக முதலில் கூறப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது பிரசாத் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஓட்டுநரின் அஜாக்கிரதையால் விபத்து நடக்கவில்லை. அவர் செல்போனிலும் பேசவில்லை.  ஓட்டுநரின் இருக்கை கழன்றதால் பேருந்தின் ஸ்டேரிங் லாக் ஆகி விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் பயணம் செய்ய செய்த மூன்று பேர் ஓட்டுநரின் இருக்கை கழன்று விழுந்ததாக கூறினார்கள் என வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கிலிருந்து பிரசாத்தை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார். அவரை பணி நீக்கம் செய்து உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.