பாகிஸ்தான், 120 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்ட ‘ஃபத்தா’ குறுகிய தூர தரை முதல் தரை வரை ஏவப்படும் ஏவுகணையை சோதனை செய்தது. இந்த சோதனை ‘எக்சர்சைஸ் இண்டஸ்’ என்ற பாதுகாப்புப் பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் நோக்கம், ஏவுகணையின் தொழில்நுட்ப அளவுருக்கள் மற்றும் செயல்திறனைக் கோட்பாடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கான தயார்நிலையை உறுதி செய்வதாக பாகிஸ்தான் ISPR தெரிவித்துள்ளது.

மே 2ஆம் தேதி ‘அப்தாலி’ ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து, இது பாகிஸ்தானின் இரண்டாவது ஏவுகணை சோதனையாகும். குறிப்பாக, ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியக் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைக் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் உச்சக்கட்ட பதற்ற நிலைமைக்கிடையே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக இந்தியா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துதல், பாகிஸ்தான் குடிமக்களுக்கு விசாக்கள் ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் இந்தியா எடுத்துள்ளது.

இந்த சோதனையை நேரில் பார்த்த பாகிஸ்தான் கூட்டுப் படைத்தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர், பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஆயுதப்படைகளின் தயார்நிலை மற்றும் முழு ஆற்றலை பாராட்டினர்.

பாகிஸ்தான் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வது, சர்வதேச சமாதான முயற்சிகளுக்கு எதிரானது என்றும், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாகவும் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.