சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை டிக்கெட் பரிசோதனை மூலம் 12 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரத்து 832 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது, ரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும் இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனையடுத்து ரயில்களில் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி ரயில்வே துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.