திருச்சி மாநகரம் பாலக்கரை அருகே பிரபாத் ரவுண்டானாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வெண்கலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1928 ஆம் வருடம் பிறந்த இவருக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகம் என்று தான் கூற வேண்டும். முதலில் அவர் திருச்சியில் உள்ள நாடக குழுவில் நடிக்க தொடங்கினார். பின்னர் திரைத்துறையில் அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக அவர் நடித்த பராசக்தி, கட்டபொம்மன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் மக்களை கவர்ந்தது.

இவருடைய மறைவுக்குப் பிறகு திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்டது. 2011 ஆம் வருடம் அவருக்கு 9 அடி உயர வெண்கல சிலையும் அமைக்கப்பட்டது. ஆனால் சிலை திறப்பதற்கு முன்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இதுவரை சிலை திறக்காமல் இருக்கிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை இன்று நடிகர் பிரபு திருச்சியில் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரபு, “திருச்சியில், தனது தந்தை சிவாஜியின் சிலை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இதனை திறந்து வைக்க ஏற்பாடு செய்வார் என கருதுகிறேன்” என்று அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை விடுத்தார்.