இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக பள்ளி முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலை இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 6 வருடங்களில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இந்த 6 ஆண்டுகளில் சுமார் 1551 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் 280 வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் இதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேச மாநிலத்தில் 207 வழக்குகளும், அசாம் மாநிலத்தில் 205 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 155 வழக்குகளும், கர்நாடகாவில் 79 பாலியல் வழக்குகளும் பதிவாகியுள்ளது.