பிரபல அர்பன் கம்பெனி அறிமுகப்படுத்திய இன்ஸ்டா பணியாளர்கள் திட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நமக்கு தேவைப்படும் நேரங்களில் வேலைக்கு பணியாளர்களை புக் செய்து கொள்ளலாம். 15 நிமிடங்களில் அவர்கள் வீட்டிற்கு வந்து வீட்டு வேலை, சமையல் வேலை, வீடு துடைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுத்து விடுவார்கள். முதற்கட்டமாக மும்பையில் மட்டும் இந்த திட்டம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அர்பன் கம்பெனியில் இன்ஸ்டா பணியாளர்களாக இருக்கும் நபர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு, ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்கப்படும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பாக அர்பன் கம்பெனி கூறியதாவது, எங்கள் சர்வீஸ் பாட்னரின் நல்வாழ்வில் எங்களுக்கு அர்ப்பணிப்பு உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு எங்கள் சர்வீஸ் பார்ட்னர்களுக்கு 150 முதல் 180 ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கும். மேலும் இலவச சுகாதார காப்பீடு, வேலையில் ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு கிடைக்கும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 132 மணி நேரம் வேலை பார்க்கலாம். குறைந்தபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டலாம் என அவர் கூறியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு 49 ரூபாய் என்ற நிலையில் இந்த சர்வீஸை முதலில் அறிமுகம் செய்துள்ளனர். இனிவரும் காலங்களில் சேவை அதிகரிக்கும் போது வருவாயும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த திட்டம் ஒரு தரப்பினரால் வரவேற்கப்பட்டாலும், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. வேலைக்கு பணிப்பெண்கள் மற்றும் வேலைக்காரர்கள் கிடைப்பது கடினமாக இருக்கும் சூழலில், இது உதவியாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதை உறுதி செய்யவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கக்கூடியதாக உள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த புதிய சேவை எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படும், பணியாளர்கள் அதன் மூலம் எவ்வாறு பயனடைவார்கள் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியமாக உள்ளது.