நாட்டிலேயே முதன்முறையாக, கேரள அரசு பள்ளிகள் திறக்கும் பிறகு, மாணவர்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு பாடப்புத்தகங்களை கொண்டு வர வேண்டியதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் உடல், மன நலனையும், சமூக விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கத்துடன் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகச் சுமை குறித்து நாடு முழுவதும் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், கேரள அரசு இதற்கான தீர்வை முன்வைத்துள்ளது.

ஜூன் 2ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டம் சமூக விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும். போதைப்பழக்கம், ஒழுக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக ஊடக பயன்பாடு, சுகாதாரம், சட்ட அறிவு போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு இந்த வகுப்புகள் நடைபெறும் என மாநில கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

இவ்வகுப்புகளில் ஆசிரியர்கள் மட்டுமன்றி, காவல்துறை, சுகாதாரத்துறை, சமூக நல அதிகாரிகள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும், 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகள் ஜூன் 18ஆம் தேதி தொடங்க உள்ளன. அவர்களுக்கும் ஒரு வாரத்திற்கு இந்த விழிப்புணர்வு வகுப்புகள் அமலாக்கப்படும்.

ஏற்கனவே, பாடப்புத்தகங்கள் எடையை கட்டுப்படுத்த வகுப்பு வாரியாக வரம்பு விதிக்கும் உத்தரவை கேரள அரசு பிறப்பித்திருந்தது. தற்போது சமூக விழிப்புணர்வு வகுப்புகளுக்கான புதிய அறிவிப்பும் மாணவர்களின் கல்வி சூழலை நவீனமாக மாற்றும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து பெரும் வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகின்றன.