
கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள இந்தியக் கடற்படை அலுவலகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 10) இரவு 9.15 மணியளவில் வந்த தொலைபேசி அழைப்பு தற்போது தேசிய பாதுகாப்பு விஷயமாக மாறியுள்ளது. அழைப்பில், தன்னை ராகவன் என அறிமுகப்படுத்திய நபர், “நான் பிரதமர் அலுவலக அதிகாரி” என கூறி, ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் தற்போது எங்கு உள்ளது என்பதைப் பற்றிய ரகசிய தகவல்களை கேட்டுள்ளார்.
உடனே கடற்படை அலுவலக அதிகாரிகள் துறைமுக காவல்துறையைத் தொடர்பு கொண்டனர். போலீசார் தொடர்ச்சியாக நடத்திய விசாரணையில், அழைப்பு செய்த நபர், கோழிக்கோடு, எலத்தூர் பகுதியைச் சேர்ந்த முஜீப் ரஹ்மான் என்பதும், அவர் பிரதமர் அலுவலகத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை உடனடியாக காவலில் எடுத்தனர்.
அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் முஜீப்புக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது கொச்சிக்கு அழைத்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. INS Vikrant பற்றி ஏன் அவர் தகவல் கேட்டார், இது ஒருவித உளவு முயற்சியா, அல்லது வேறு யாருக்காவது பணி புரிந்தாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முஜீப் மனநல சிகிச்சை பெறும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது தனிமனிதத் தவறா அல்லது பெரிய சூழ்ச்சியின் ஓர் அங்கமா என்பதைக் கண்டறிய, கொச்சி சிட்டி கமிஷ்னர் விமலாதித்தியா நேரடி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.