
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியின் போது நடிகர் அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் வந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த நிலையில் அவருடைய மகன் ஸ்ரீதேஜ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஒருநாள் இரவு முழுவதும் சிறையிலிருந்த நிலையில் பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் ரேவதி மரணத்தை நினைத்து மிகவும் வருந்துவதாகவும் கண்டிப்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தான் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பதாகவும் கூறினார்.
முன்னதாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியின் மகன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஸ்ரீதேஜ் உடல் நலம் குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறேன். நடந்து கொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக அவரையும் அவரின் குடும்பத்தினரையும் சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. என்னுடைய பிரார்த்தனைகள் எப்போதும் அவர்களுடன் இருக்கும். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மேலும் அவரை சந்திப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.