டெல்லியில் பள்ளி மாணவர் ஒருவர் சிறுமியுடன் நட்பு வைத்திருந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நங்லோய் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 15 வயதான 9-ம் வகுப்பு மாணவர் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவருடன் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவியும் சில நண்பர்களும் சென்றுள்ளனர். அப்போது 3 சிறுவர்கள் அவர்களை வழிமறித்து, அந்த மாணவியுடன் மாணவர் வைத்திருந்த நட்பு குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மாணவரும் அவரது நண்பர்களும் அங்கிருந்து வீட்டை நோக்கிச் சென்றுள்ளனர். ஆனால் சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு, அதே 3 சிறுவர்கள் மீண்டும் அவர்களை வழிமறித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அப்போது அந்த மாணவியுடன் நட்பு வைத்திருந்தது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவர்களில் ஒருவர் மாணவரை கத்தியால் தாக்கிவிட்டு, மற்ற இருவருடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
கத்திக்குத்தில் காயமடைந்த மாணவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து பிற்பகல் சுமார் 1.50 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் மாணவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்பட்ட 3 சிறுவர்களும் சில மணி நேரங்களுக்குள் போலீஸாரால் பிடிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பிடிபட்ட 3 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவருக்கும் அந்த சிறுமிக்கும் இடையிலான நட்பே தகராறுக்கு முக்கிய காரணமாக இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு கொலை வரை சென்ற சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
