கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது‌. இது குறித்த தகவலின் பேரில் சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில மாணவர்களின் பெற்றோருக்கு நேரா வைரஸ் தொற்று இருப்பதும் அவர்களிடமிருந்து மாணவர்களுக்கும் வைரஸ் தொற்று பரவியதும் தெரியவந்தது. இந்நிலையில் பள்ளியில் நோய் அறிகுறிகளுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத் துறையினர் பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், 2 மாணவர்களுக்கு நேரா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.

இவர்களுடன் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாணவர்களின் பெற்றோர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேரா வைரஸ் தோற்று அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு போன்றவைகளில் இருந்து தான் பரவும் என்பதால் மக்கள் காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும் என்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவியப் பிறகே பயன்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.