
தமிழ்நாட்டில் வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் பணவீக்கம் (Inflation) அடிப்படையில் மின் கட்டண மாற்றங்கள் நடைபெறும் நடைமுறை இயல்பாகி வருகிறது. கடந்த 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் மின் கட்டணங்கள் முறையே 2.18% மற்றும் 4.83% உயர்த்தப்பட்டன. அந்த வரிசையில், 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 3.16% வரை கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
இந்த மின் கட்டண உயர்வு இந்திய அளவிலான நுகர்வோர் விலை குறியீட்டு கணக்கு (CPI) அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. CPI அடிப்படையில் கட்டண திருத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) தனது வருவாயை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வருகிற ஜூலை மாதம் குறைந்த மின்னழுத்தம் மற்றும் உயர் மின்னழுத்தம் என இரண்டிலும் மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. இது வீடுகள், கடைகள், தொழில்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் கட்டண உயர்வை மானியத் திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு நேரடி பாதிப்பு இல்லாமல் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் அதே போன்று மானியச் சலுகைகள் அமல்படுத்தப்படுமா என்பது மாநில அரசின் நிதிநிலை மற்றும் செயல் திட்டங்களை பொறுத்தது.
மேலும், 2025-26 நிதியாண்டில், புதிய மின் இணைப்பு, நிர்வாக கட்டணங்கள் போன்ற பிற வருவாய் வழிகளிலும் அதிகரிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.