சென்னையில் உள்ள தியாகராய நகர் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக விளங்குகிறது. இந்த பகுதியில் ரங்கநாதன் தெரு, சத்யா பஜார் போன்ற ஏராளமான கடைகள் இருக்கிறது. இங்கு தினம் தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது. நடந்து கூட செல்வதற்கு இடம் இருக்காத நிலையில் வாகனங்கள் எங்கே பயணிக்க முடியும். அந்த அளவுக்கு கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியாக திநகர் மாறி வருகிறது. இந்நிலையில் மாம்பழம் ரயில் நிலையத்திலிருந்து திநகர் பேருந்து நிலையத்திற்கு நடை மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன் மூலமாக கூட்ட நெரிசலை ஓரளவு குறைக்கலாம் என திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பணி தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊழியர்கள் சரியாக பணிக்கு வராதது, ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை, மேம்பால திட்ட வடிவமைப்புகளில் செய்யப்பட்ட மாற்றம் போன்ற காரணங்களினால் பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பாதியில் இருந்து இந்த பணிகள் வேகம் எடுத்தது. இதனையடுத்து இந்தமாத இறுதியில் திறப்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் கூறியதாவது, லிப்ட் வசதிகள் மட்டும் அமைக்கப்பட வேண்டும். அந்த பணிகளும் அடுத்த ஒரு வாரத்திற்குள் முடிவடைந்து விடும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு சர்க்கரை நாற்காலி சேவை அளிக்க திட்டமிட்டு இருக்கின்றோம். அவர்கள் லிப்டில் ஏறி அதன் பின் ஸ்கைவாக்கில் எளிதாக பயணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மேலும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத விதமாக வியாபாரிகள் யாரும் ஸ்கைவாக்கை  ஆக்கிரமிக்காமல் தினமும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். என்ஜின் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.