கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள மேலகுண்டா கிராமத்தில், 18 வயது மகளை அவரது தந்தை ஷங்கர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் காதலில் இருந்ததை எதிர்த்த ஷங்கர், கொலையை தற்கொலையாக காட்டுவதற்காக விஷ மருந்தை அவர் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினார்.

இதனைத் தொடர்ந்து, கிராம மக்களிடம் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தவறான தகவலை பரப்பி, இறுதி சடங்குகளையும் நடத்தினார்.

காவல்துறைக்கு தற்கொலை என்று தகவல் கிடைத்தாலும், சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உள்ளூர் காவல்துறையினர் ஆய்வு செய்து, ஷங்கரை கைது செய்தனர்.

கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஷங்கரின் உறவினர்கள் இருவர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை தொடர்கிறது, மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என கலபுர்கி காவல் ஆணையர் ஷரணப்பா எஸ்.டி தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.