கடலூர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே கேள்விக்குள்ளாக்கும் கொடூர சம்பவம் நடந்தது. சிதம்பரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், பழனிச்சாமி என்பவரிடம் ரூ.6 லட்சம் வரை கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. சில காரணங்களால் அந்த கடனை உடனே திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மணிகண்டன் தனது தந்தை நடராஜனுடன் சீர்காழி பகுதியில் குடிபெயர்ந்து சென்று இருந்தார். இந்த தகவலை தெரிந்துகொண்ட பழனிச்சாமி தனது ஆட்களுடன் சென்று , நடராஜனை கடந்த வாரம் ஒரு காரில் கடத்திச் சென்றார். பின்னர், ஆளே இல்லை என்ற இடத்தில் அவரைத் தாக்கி, கூரிய ஆயுதத்தால் கைவிரல்களை வெட்டியுள்ளார்கள் என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நடராஜன் வலியால் கதறியபடி சாலையோரத்தில் விட்டுவிட்டு அவர்கள்  காரில் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும், சீர்காழி போலீசார் விரைந்து சென்று நடராஜனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் பழனிச்சாமி மற்றும் அவரது கூட்டாளிகளை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் கந்துவட்டி கும்பல்களை கடுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.