ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் பரிசளிப்பு விழாவுக்காக மைதானத்தில் காத்திருந்தனர். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் தாமதமாக வந்ததால் ரசிகர்கள் குழப்பமடைந்ததோடு, அவர்களுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியதில், சிறந்த பந்து வீச்சு, ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை இந்திய வீரர்கள் பெற்றனர்.

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா ரன்னர்ஸ் காசோலையைப் பெற்றார். ஆனால் இந்திய அணிக்குரிய ஆசியக் கோப்பை வழங்கப்படாமல், நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், பரிசளிப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சைமன் டூல், “இந்திய அணி தற்போது தங்கள் கோப்பையை பெறப்போவதில்லை” என்று அறிவித்தார். இதனால் பரிசளிப்பு விழா முற்றிலும் நிறைவில்லாமல் முடிவடைந்தது.

பின்னர், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி, இந்திய அணிக்குரிய கோப்பையை கையோடு தனது அறைக்கு எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கோப்பையில்லாமல் இந்திய வீரர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடினர்.

கடந்த ஆண்டு டி-20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை தூக்கிய சைகை செய்து சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் பதக்கமின்றி கொண்டாடினர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி, ஆசியக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு அவர் ஒரு நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, கோப்பை வழங்குவதற்காக முறையான விழா மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. கிரிக்பஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அப்படி மீண்டும் ஒரு விழா நடத்தப்பட வாய்ப்பு குறைவே எனவும், இதனால் இந்திய அணிக்கு இப்போதைக்கு கோப்பை கிடைப்பதற்கான நிலைமை உருவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சூழல், விளையாட்டு மேடையையே அரசியல் மேடையாக மாற்றிவிட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.