வாட்ஸ்அப் அழைப்பு வாயிலாக வீட்டிலிருந்தே வேலை வாய்ப்பு வழங்குவதாக சொல்லி ரூ.70 லட்சம் வரை மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்ஆப் எண்ணில் அழைத்து வீட்டிலிருந்தே வேலை செய்து சம்பாதிக்கலாம் என கூறி, எவ்வாறு மோசடி நடந்துள்ளது என்பது பற்றி தெளிவாகப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதில், சென்ற பிப்ரவரி மாதம் இறுதியில் வாட்ஸ்அப்-ல் அழைப்பு வந்திருக்கிறது. வீட்டில் இருந்தே வேலை என கூறியதும் குர்கான் நபரும் பேசியிருக்கிறார்.

அவருக்கு டெலிகிராம் வாயிலாக சில வேலைகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதை செய்தவுடன் அதற்கேற்ற தொகையும் அவரது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. தொடக்கத்தில் 1,200 ரூபாய் முதல் மாதத்தில் ரூ.10,000 வரை மோசடி கும்பல் அந்நபருக்கு கொடுத்து உள்ளது. இப்படியே அவர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி விட்டு கையிலிருக்கும் தொகையை செலுத்தி நல்ல வருவாய் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி இருக்கிறார்கள்.

அவரும் அதை நம்பி சென்ற 4 மாதங்களில் 20 பணப்பரிமாற்ற நடவடிக்கைகளின் வாயிலாக சுமார் ரூ.69 லட்சத்தை மோசடி கும்பலுக்கு அனுப்பி இருக்கிறார். பின்பு தான் அது மோசடி கும்பல் என அறிந்து போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆகவே வாட்ஸ்அப் அழைப்புகள் வாயிலாக வரும் வேலைவாய்ப்புகளை நம்பி மக்கள் ஏமாறவேண்டாம் என காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் இது தொடர்கதையாகவே நீடிக்கிறது