
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜெயம் ரவி, தன் மனைவி ஆர்த்தியுடன் 15 ஆண்டுகள் நீண்ட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து, ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையில், இந்த விவாகரத்து ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று தெரிவித்தார். ஆர்த்தியின் ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும், அவர் இது தொடர்பாக அவசரமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் கூறினார்.
ஜெயம் ரவி, ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மோசமாக நடத்தினார்கள் என்றும், 15 வருடங்களில் தன்னுடைய சொந்த வங்கி கணக்கை கூட திறக்க முடியாத அளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு கூறினார். மேலும், ஜெயம் ரவி, கோவா பாடகி கெனிஷாவுடன் உள்ள உறவால் தான் இந்த விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் செய்திகள் பரவிய நிலையில், ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவரும் அதை மறுத்தனர்.
இந்த நிலையில், ஆர்த்தி ரவி, “உண்மையை மறைக்காமல், என்னையும், என் தனிப்பட்ட வாழ்க்கையை தவறாக சித்தரிப்பவர்களுக்கு நான் அமைதியாக இருக்கிறேன் என்பதில் எந்த குற்ற உணர்ச்சியோ பலவீனமோ இல்லை” என்று விளக்கினார். மேலும், தன் கணவருடன் வாழ்வதை விரும்புகிறேன் என்றும், அவர் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்தார். இந்த அறிக்கையை அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
ஆர்த்தியின் இந்த பதிவுக்கு குஷ்பு மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் ஆறுதல் கமெண்ட்கள் அளித்தனர். சைந்தவி, “தைரியமாக இருங்கள் அக்கா, உங்களுக்காக என் பிரார்த்தனைகள்” என கூறியிருந்தார். குஷ்பு, “நீ மிகவும் தைரியமானவள்” எனத் தெரிவித்தார். இதற்கு முன்பு ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவை மறைமுகமாக குஷ்பு சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.