கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் எம்.பி.ஏ பட்டப்படிப்பு முடித்துவிட்டு உண்ணாமலை கடை பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது இ-மெயில் முகவரிக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான அழைப்பு வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் விமான நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கிறது.

அந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் சென்னையில் நடைபெறும். அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என கூறினார். இதனையடுத்து சென்னைக்கு சென்ற போது அவர்கள் கூறிய முகவரியில் ஒரு தனியார் ஹோட்டல் இருந்தது. தேர்வில் கலந்து கொண்ட பிறகு எந்தெந்த பணிகளுக்கு ஆட்கள் தேவை என்ற விபரத்தை இமெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது எனது சகோதரருக்கும் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தர வேண்டும் என தெரிவித்தேன். அவர்கள் எனக்கும் எனது சகோதரருக்கும் தலா 75 லட்ச ரூபாய் வீதம் 1 1/2 கோடி ரூபாய் கேட்டனர். அதனை கொடுத்த பிறகும் கூடுதல் பணம் கேட்டனர். இதுவரை மொத்தமாக 2 கோடியே 49 லட்சத்து 23 ஆயிரத்து 250 ரூபாய் பணத்தை கொடுத்தேன். ஆனால் கூறியபடி அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை.

எனவே பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் அவர்கள் மனைவி அம்பிகா ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமறைவான ரஞ்சித், அம்பிகா இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.