கரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி லே- அவுட் பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராம்குமார் தனது தாய் மோகனா, அக்கா மகன் தருண் ஆகியோருடன் காரில் கோவையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரங்கநாதபுரம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது கரூர் நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியதால் ராம்குமார், தருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். மேலும் மோகனா, தனியார் பேருந்து டிரைவரான தியாகு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த மோகனா, தியாகு ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராம்குமார், தருண் ஆகியோரின் உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.