ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலரது உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், கோரமண்டல் ரயிலில் 1257, யஸ்வந்த்பூர் ரயிலில் 1039 என மொத்தம் 2296 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத உறவினர்கள் சிறப்பு ரயிலில் ஒடிசா வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை அழைத்து கொண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுரா (12840) மெயில் சிறப்பு ரயில் இரவு 7.20 மணிக்கு பத்ராக் புறப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர், உறவினர்களை அழைத்து செல்ல தெற்கு ரயில்வே இந்த சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. சென்ட்ரலில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இந்த ரயிலுக்கான பயணச்சீட்டுகளை பெறலாம்.