கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவர் விடுதி அமைந்துள்ளது இங்கு அரசு பள்ளிகளில் படிக்கும் 34 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். கடந்த 2-ஆம் தேதி இரவு உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று திடீரென மாணவர்கள் தொண்டாமுத்தூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் கூறியதாவது, தரமான உணவு வழங்கப்படுவதில்லை. குடிநீரில் எறும்புகள் கிடக்கிறது. பெற்றோரிடம் செல்போனில் பேசுவதற்கு அனுமதி தருவதில்லை. மேலும் எங்களை தவறான வார்த்தைகளால் பேசும் விடுதி வார்டனை மாற்ற வேண்டும் என பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.