
மதுரையில் உள்ள பீபீ குளம் பகுதியில் வருமானவரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் நேற்று பொங்கல் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் வைகை புயல் வடிவேலு கலந்து கொண்டார். அப்போது அவர் பல சுவாரசியமான விஷயங்களை செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பகிர்ந்தார். அவர் பேசியதாவது, எனக்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே பொங்கல் பண்டிகை வந்துவிட்டது போல் தோன்றுகிறது. நான் மக்களோடு மக்களாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்பிய நிலையில் தற்போது என் ஆசை நிறைவேறிவிட்டது.
அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியை காண செல்வீர்களா என்று கேட்டபோது அதற்கு வடிவேலு நான் மாடுபிடிக்கிற ஆள் கிடையாது. வேண்டுமானால் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பேன். இனி அதுல தள்ளி விட்டு போயிடாதீங்க என்ற நகைச்சுவையாக கூறினார். அதன்பிறகு மாடை கண்டாலே நான் ஓடி விடுவேன். முன்பு கண்ட்ரோல் இல்லாமல் மாட்டை அவிழ்த்து விட்டு விடுவார்கள்.பேசிக் கொண்டிருந்தால் பின்னால் வந்து குத்திவிடும். ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு போட்டி கண்ட்ரோலுடன் நடக்கிறது. சிறப்பான முறையில் நடைபெறுகிறது என்றார்.
அதன் பிறகு ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என்று கூறினார். அதாவது ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என்று நகைச்சுவையாக அவர் கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு இப்போது படங்களை எல்லாம் பார்த்து தான் தேர்வு செய்வதாக கூறி அவர் விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் அவருடைய இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா என்று கேள்விக்கு வேறு ஏதாவது பேசுவோமா என்று கூறினார். இதேபோன்று அஜித் கார் விபத்தில் சிக்கியது குறித்த கேள்விக்கும் வேறு ஏதாவது பேசுவோமா என்று கூறினார். மேலும் மாரீசன் என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.