உத்திரப்பிரதேசம் மாநிலம் கேன்பூரில் உள்ள பாங்கி பவர் பிளாண்டில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த வினித் துபே என்ற இளைஞர், தலைமுடி கொட்டியதால் வருத்தமடைந்து, கடந்த மார்ச் 13ஆம் தேதி கேன்பூரில் உள்ள எம்பையர் கிளினிக்கில் முடி மாற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இந்த சிகிச்சையை அனுஷ்கா திவாரி என்ற பெண் “டாக்டர்” என அறிமுகப்படுத்தி கொண்டார். பின் எந்தவித மருத்துவ பரிசோதனை அல்லது அலர்ஜி சோதனையும் இன்றி சிகிச்சை செய்துள்ளார்.

சிகிச்சைக்கு பின் வினித் துபேக்கு முகம் வீக்கம், உடல் சோர்வு என கடுமையான பக்கவிளைவுகள் தோன்றின. அவர் இரண்டு முறை கிளினிக்கிற்கு சென்ற பிறகும் நிலைமை மேலும் மோசமானது.

மார்ச் 14-ஆம் தேதி, அனுஷ்கா திவாரி வினித்தின் மனைவி ஜயாவை அழைத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சேர்க்கும்படி கூறி விட்டு  தனது கைப்பேசியை அணைத்து விட்டு மாயமானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வினித் துபே உயிரிழந்தார். ஜயாவின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் அனுஷ்கா திவாரி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், எந்த விதமான மருத்துவ தகுதியும் இல்லாதவர், அனுமதியின்றி கிளினிக் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.