மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 35 வயது இளைஞர் ஒருவர் தம்பதியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவைச் சேர்ந்த சாகர் வான்கடே (35) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவர். இந்தச் சம்பவத்தில் ராஜேஷ் கஜ்பியே (37) மற்றும் அவரது 34 வயது மனைவி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த வான்கடேவும், ராஜேஷின் மனைவியும் உறவினர்கள்; திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்த இவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பின் 2022-இல் முகநூல் வாயிலாக மீண்டும் தொடர்பில் வந்துள்ளனர்.

இருவரும் புனேவில் சில காலம் சேர்ந்து வாழ்ந்தபோது, வான்கடே மதுபோதையில் அந்தப் பெண்ணைத் தாக்கியதால் அவர் மீண்டும் தனது கணவரிடமே வந்துவிட்டார்.

கணவருடன் வாழத் தொடங்கிய பிறகும், வான்கடே அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட தம்பதியினர் முடிவு செய்தனர்.

ஆசை வார்த்தை கூறி வான்கடேவை வரவழைத்த அந்தப் பெண், பைக்கில் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை முதலில் குத்திய பெண், பின்னர் தனது கணவரிடம் கத்தியைக் கொடுக்க, அவர் வான்கடேவை சரமாரியாகக் குத்திக் கொன்றார்.

பட்டப்பகலில் மக்கள் முன்னிலையிலேயே நடந்த இந்த கொடூரக் கொலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொலையைச் செய்துவிட்டு அந்தத் தம்பதியே காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், போலீசார் அவர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.