லிப்ட்களில் கண்ணாடிகள் இருப்பதை பார்த்தவுடனேயே, பெரும்பாலானவர்கள் தங்களது தோற்றத்தை சீராக பார்ப்பதற்காக அதை பயன்படுத்துவார்கள். ஆனால், லிப்டில் கண்ணாடிகள் இருப்பதற்கு இதுதான் ஒரே காரணம் அல்ல. உண்மையில், லிப்ட்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளதற்கு மிக முக்கியமான சில காரணங்கள் உள்ளன. கண்ணாடிகள், அழகியல் காரணங்களை தாண்டி பயனாளர்களின் உளவியல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிறுவப்படுகின்றன.

முதலாவது முக்கிய காரணம் உளவியல் தொடர்புடையது. மூடிய அல்லது குறுகிய இடங்களில் பயணிக்கும் போது பலர் கிளாஸ்ட்ரோஃபோபியா (இடப்பற்றாக்குறை) என்ற பதற்றத்தை அனுபவிக்கிறார்கள். இது ஒரு அடிப்படை பயம், குறுகிய இடங்களில் சிக்கித் தவிப்பது போல உணர்ந்து மயக்கம், சுவாசக்குறைவு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். லிப்டில் உள்ள கண்ணாடிகள், அந்த குறுகிய நிலையை பெரிதாகும் என உணர வைக்கும் வகையில் கண்ணாடியின் பிரதிபலிப்பு மூலம் இடம் அதிகம் இருப்பது போல ஒரு மாயையை உருவாக்குகின்றன. இதன்மூலம் பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியும்.

இரண்டாவது, லிப்டில் உள்ள கண்ணாடிகள் பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் முக்கியம். ஒரு குறுகிய, மூடப்பட்ட இடத்தில், பயணிகள் தங்களுக்கு பின் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாது. கண்ணாடியின் பிரதிபலிப்பை நன்கு பயன்படுத்தி, தன்னுடன் அல்லது பின்னால் உள்ளவர்களை கவனிக்கலாம். இதனால் மற்ற பயணிகளின் செயல்களை அறிந்து கொள்ளலாம், சாத்தியமான அச்சுறுத்தல்களை தடுக்கவும் முடியும். இது பயணிகள் உணர்வுப்பூர்வமாக பாதுகாப்பாக இருப்பதாக உணர உதவுகிறது.

மூன்றாவது முக்கியமான காரணம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சக்கர நாற்காலி பயனாளர்களுக்கு உதவுதல் ஆகும். சக்கர நாற்காலியில் உள்ள நபர், பின்னால் திரும்ப முடியாத சூழலில் கண்ணாடியின் பிரதிபலிப்பை பயன்படுத்தி, பின்னால் என்ன இருக்கிறது என்பதை கண்டறிந்து, திரும்பாமல் நேராக லிப்டில் இருந்து வெளியேற முடியும். நான்காவது, கண்ணாடிகள் பயணத்தின் போது காத்திருப்பதை சலிப்பில்லாமல் உணர்த்த உதவுகின்றன. லிப்ட்டில் காத்திருக்கும் நேரத்தில், கண்ணாடியில் தங்களது தோற்றத்தை பார்ப்பது மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது. இவ்வாறு கண்ணாடியில் பார்க்கும் செயலே அவர்களுக்கு காத்திருப்பது குறுகியதாகவும் சலிப்பற்றதாகவும் தோன்றுகிறது.