நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஹரிஹரன் என்ற மகனும், 3 மாத கைக்குழந்தையான நிகல்யா என்ற மகளும் இருந்துள்ளனர்.

கடந்த 1௦-ஆம் தேதி கார்த்திகேயன் வேலைக்காக பக்ரைன் நாட்டிற்கு செல்ல புறப்பட்டார். அவரை வழி அனுப்புவதற்காக வளர்மதி, நிகல்யா, ஹரிஹரன், வளர்மதியின் தங்கை வனிதா, அவரது ஆறு மாத கை குழந்தையான விக்ராந்த், வளர்மதியின் தாய் வெண்ணிலா ஆகியோர் காரில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றனர். அந்த காரை சத்தியசீலன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் கார்த்திகேயனை வழி அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் இரவு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தட்டை கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சத்தியசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து படுகாயமடைந்த வனிதா, வெண்ணிலா, விக்ராந்த், வளர்மதி, ஹரிஹரன், நிகல்யா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று மாத குழந்தையான நிகல்யாவும், 6 மாத குழந்தையான விக்ராந்த்தும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.