ஹைதராபாத்தில்  பாகிஸ்தான் அணி இரவு உணவு சாப்பிட்டு மகிழ்ந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது..

2023 உலகக் கோப்பைக்காக இந்தியா வந்ததில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகவும் மகிழ்ந்து வருகிறது. அவர்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் அதிக அன்பும் மரியாதையும் கிடைத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தருகிறது.

முன்னதாக, டி20 உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் 2016 இல் இந்தியாவுக்கு வந்திருந்தது. இங்கு வந்த பிறகு, பாகிஸ்தான் அணியினர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். முன்னதாக ஹைதராபாத் வந்ததும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் மனம் நெகிழ்ந்து கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹின் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் அணியின் வீடியோவை மிகவும் பிரபலமான சமூக ஊடக தளமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், ஹைதராபாத்தில் இரவு உணவிற்காக ஒட்டுமொத்த குழுவும் ஒன்றாக வெளியே ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அணி இரவு உணவின் வீடியோவில், வீரர்கள் மிகவும் ஜாலியாக இருப்பதைக் காணலாம், அணி இரவு உணவிற்குச் சென்ற உணவகத்தில் அவர்களுக்கு அரச வரவேற்பு கிடைத்தது. அவர்களுக்கு மலர் மற்றும் பாசி மாலை அணிவித்து  வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு முழுக் குழுவும் பல வகையான உணவுகளை நன்றாக சாப்பிட்டு, நேரத்தை ஒன்றாகக் கழித்தனர். மேலும் அங்குள்ள மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது :

பாகிஸ்தான் அணி  நியூசிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்தது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்து. நியூசிலாந்துக்கு 346 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. ஆனால் நியூசிலாந்து அணி 43.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்த அபார ஸ்கோரை எட்டியது. பாகிஸ்தானின் பந்துவீச்சு மிகவும்  மோசமாக இருந்தது. உலக கோப்பையில் அக்டோபர் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியுடன் பாகிஸ்தான் தனது பயணத்தை தொடங்குகிறது.