
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன், “பகுதி நேர வேலை வாய்ப்பு” என ஒரு டெலிகிராம் மெசேஜ் வந்துள்ளது. இதனை நம்பிய பெண் அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, “ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங் மற்றும் ரிவியூ கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்” என கூறி ஒரு லிங்க் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் அந்த லிங்க் மூலம் சில ரேட்டிங் பணிகளை செய்ததற்காக, ரூ.3,670 பணம் பெற்ற அந்த பெண்ணிடம், “ஆன்லைன் டிரேடிங் மூலமாக அதிக லாபம் பெறலாம்” என ஆசை வார்த்தைகள் கூறி, மேலும் ஒரு புதிய லிங்க் அனுப்பப்பட்டது.
அதை நம்பிய பெண், அந்த இணையதள பக்கத்தில் மொத்தம் ரூ.5,90,830 வரை முதலீடு செய்துள்ளார். ஆனால், அதன்பின் எந்த லாபமும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் தேசிய சைபர் குற்றப்பதிவு இணையதளத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கன்னியாகுமரி மாவட்டம் திருப்பறப்பு பள்ளிமுக்கு பகுதியைச் சேர்ந்த மகேஷ் (வயது 37) என்பவர் இந்த பண மோசடியில் நேரடியாக ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய பிற நபர்கள் யார் என்ற மூல தகவல்களை கண்டறிந்து பிடிக்கவும், அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை உறுதி செய்யவும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள், இவ்வாறான டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் வழியாக வரும் பண வாய்ப்பு, டிரேடிங் போன்ற லிங்க்களை நம்பி எந்த பணத்தையும் செலுத்தக் கூடாது எனவும், சந்தேகமான தகவல்களை உடனடியாக சைபர் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.