தமிழகத்தின் நியாய விலை கடைகளில் அடிக்கடி ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் இதற்காக அரசு பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை சமூக விரோத செயலாக சிலர் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதும் அரசுக்கு புகார் எழுந்துள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் இந்த குற்றங்கள் இன்னும் தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரேஷன் பொருட்களைக் கடத்தல் அல்லது பதுக்கல் செய்யும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது இன்றியமையா பண்டகங்கள் சட்டம் 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைக்களின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.49,41,826 மதிப்புள்ள 3877 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 441 எரிவாயு சிலிண்டர், 201 கிலோ கோதுமை, 101 கிலோ துவரம் பருப்பு, 1997 லிட்டர் மண்ணெண்ணெய், 7 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 187 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றச் செயலில் ஈடுபட்ட 593 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.