ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையின் பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதன் மூலமாக மிகுந்த பயனடைகின்றனர். அதே சமயம் சிலர் இந்த பொருட்களை முறைகேடாக கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் பெறுகின்றனர்.

அதனால் பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் பொது விநியோகப் பொருள் கடத்தல், பதுக்கல்  தொடர்பான புகார்களை உடனுக்குடன் பொது விநியோகப் பொருள் தடுப்பு பிரிவுக்கு 18005995950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த இலவச தொலைபேசி எண்ணானது சென்னையில் ஏடிஜிபி அருணின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கட்டுப்பாடு அறையில் செயல்படுகிறது. இந்த எண்ணில் புகார் தெரிவிக்கும் நபர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் பொது விநியோகப் பொருள் கடத்தல், பதுக்கல்  உள்ளிட்ட அனைத்து முறைகேடுகளையும் இந்த தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.