தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடி தவிர்ப்பதற்காக ரேஷன் கார்டுகளில் இருக்கும் உறுப்பினர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் கைரேகை பதிவு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு சார்பாக இதுபோன்ற எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் உயர் அதிகாரிகள் தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம் கைரேகை பதிவுக்காக ரேஷன் கடைகளுக்கு வரும்படி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும் ரேஷன் அட்டைதாரர்களின் வீட்டுக்குச் சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் கைரேகை பதிவு செய்யப்படவில்லை என்றால் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படாது என்றும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.