சங்காரெட்டி மாவட்டத்தின் காங்டி மண்டல் மையத்தில் நடைபெற்ற கூதிர் விழாவில் வினய் ரெட்டி என்ற 10 வயது சிறுவன் தனது தாத்தாவுடன் கலந்து கொண்டார். அங்கு உள்ள ஒரு கடையில் ரூ.300-க்கு ஹெலிகாப்டர் பொம்மையை வாங்கிய வினய், வீட்டுக்கு வந்து அதை இயக்க முயன்றபோது அது பறக்கவே இல்லை. அதனால், பொருளின் தரத்தில் திருப்தி இல்லாமல் கடைக்காரரிடம் திரும்பச் சென்றார்.

அப்போது கடைக்காரர், பழுதான ஹெலிகாப்டருக்கு பதிலாக புதியது ஒன்றை மாற்றி கொடுத்தார். ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. மறு முறையும் வினய் மறுபடியும் கடைக்குச் சென்று, வேறு நிறத்தில் இருந்த ஹெலிகாப்டர் ஒன்றை பெற்றார். ஆனால் மூன்றாவது முறையிலும் பொம்மை பறக்காததால், சிறுவன் மிகவும் வேதனையடைந்தான்.

 

மூன்று முறை மாற்றி வாங்கியும் ஹெலிகாப்டர் வேலை செய்யாததால் கடைக்காரரிடம் மீண்டும் முறையிட சென்ற வினயிடம், இந்த முறையில் கடைக்காரர் கோபத்துடன் பதிலளித்து பொம்மையை திருப்பிக் கொள்ள மறுத்துவிட்டார். நியாயம் கேட்டு தாத்தாவுடன் இணைந்து, வினய் நேராக போலீஸ்காரரிடம் சென்று புகார் அளித்தார். முதலில் அதனை கேட்டு போலீசார் சிரித்தாலும், பின்னர் சிறுவனின் நியாயமான கோரிக்கையை மதித்து, சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் விசாரிக்க சப் இன்ஸ்பெக்டரை அனுப்பினர். ஆனால், அந்நேரத்தில் கடைக்காரர் தப்பித்துவிட்டதாக தெரிகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.